POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 9

ஒரு அவுட்டோர் கேம் ஆடுவதில் எவ்வளவு சவால்கள் இருக்கிறதோ, அவை எல்லாமே கரன்சி மார்க்கெட்டிலும் இருக்கிறது. கரன்சி விளையாட்டில் உங்களுக்குப் பெரிய எதிராளி மார்க்கெட்தான்! எந்த ஒரு விளையாட்டிலும் அதிலிருக்கும் சவால்கள் அனைவருக்கும் சமமாக இருக்கும். அந்த சவாலை எதிர்கொண்டு தன்னுடைய தனித்திறமையால் வெற்றி பெறுபவர்கள் சேம்பியன்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், கரன்சி மார்க்கெட் எனும் கேமில் உள்ள சவால்கள் அந்த கேமை ஆடுபவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்காது! இந்த கேமில் மிகப்பெரிய சவால் எது தெரியுமா? ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல்கள் குறித்த மூலாதாரத் தகவல்கள்தான்.

ஸ்டாக் மார்க்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கம்பெனியைப் பற்றிய இன்ஃபர்மேஷன் அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டும். இது சட்டம். ஒரு கம்பெனியின் நடைமுறை குறித்த பெரும்பான்மையான தகவல்கள் (பி அண்ட் எல், பேலன்ஸ்ஷீட் மற்றும் பல பிரைஸ் சென்சிட்டிவ் இன்ஃபர்மேஷன்கள்) அனைத்தும் அத்தனை முதலீட்டாளர்களுக்கும் ஒரே நேரத்தில் சரியாக வந்து சேர்கிறதா என உறுதி செய்ய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் செபியும் இருக்கின்றன. சிலர் இந்த விதிகளை மீறி ரகசியத் தகவல்களை வைத்துக்கொண்டு லாபம் பார்க்கும்போது, அவர்கள் மீது 'இன்சைடர் டிரேடிங்' ரெகுலேஷனின் கீழ் நடவடிக்கைகள் பாயும்.

ஆனால், கரன்சி மார்க்கெட்டில் ஒரு கரன்சியின் விலையைப் பாதிக்கும் பல விஷயங்கள் வியாபாரம் செய்யும் அனைவருக்கும் ஒரேசமயத்தில் தெரிந்து விடுவதில்லை. டிரேட் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்து தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள். டிரேடர்களின் தகுதிக்கு (வங்கிகள், ரிசர்வ் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனிமனிதர்கள்) தகுந்தாற்போல் கிடைக்கும் தகவல்களும் மாறுபடுகின்றன. இன்ஃபர்மேஷன் ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் எனச் சட்டம் போடவும் முடியாது. ஏனென்றால் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு விவரங்கள் என ஒரு கட்டுக்குள் அடங்காத கண்டம் விட்டு கண்டம் தாவும் விஷயங்கள் இதில் உள்ளன!

உதாரணமாக, ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைமை குறித்த புள்ளி விவரங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் மற்றவர்களுக்கு? இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதம் குறிப்பிட்ட தேதியன்று மானிட்டரி பாலிசியை வெளியிடும்போதுதான் தெரியவரும். ரிசர்வ் வங்கி விரும்பினால் முன்கூட்டியே அதாவது செப்டம்பரிலேயே கரன்சியைத் தேவையான திசையில் கொண்டு செல்ல இந்தத் தகவலை உபயோகித்திருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த விவரம் தெரியாமல் செப்டம்பரில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கரன்சி மார்க்கெட்டில் நீச்சலடித்திருந்தீர்கள் என்றால் நஷ்டப்பட்டிருப்பீர்கள்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ட்டை மட்டும் பார்த்தே கரன்சி வியாபாரம் செய்து விடலாம் என்பது போன்ற ஒரு கருத்து தொடர்ந்து வெளியிடப்படுவதை இணையதளங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்திருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ட்டை வழிநடத்திச் செல்வது கரன்சிகளின் ஃபண்டமென்டல்கள்தான். உலகப் பொருளாதார நடவடிக்கைகளின் ஃபண்டமென்டல் விஷயங்களையும், டிமாண்ட், சப்ளைகள் அடங்கிய டெக்னிக்கல் சார்ட்களையும் சேர்த்துப் பிரதிபலிப்பதுதான் ஒரு கரன்சியின் மதிப்பு. எனவே ஃபண்டமென்டலை மட்டும் வைத்தோ அல்லது டெக்னிக்கல் களை மட்டும் வைத்தோ, கரன்சி டிரேடிங் செய்யமுடியாது. வெற்றி பெற இவை இரண்டையும் சம அளவில் கட்டாயமாக உபயோகித்தாகவேண்டும்.

ஒரு கரன்சி pair-ஆக டிரேடிங் செய்ய முடிவு செய்யும்போது அந்த முடிவு லாபமாக இருக்கும் வாய்ப்புகளை அதிகமாக்க எந்தெந்த டூல்கள் உதவும் என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான் கரன்சி டிரேடிங்கில் இருக்கும் பெரிய சவால்! இந்த சவாலை எதிர்கொள்ள எது கரன்சியின் மதிப்பை நடத்திச் செல்கிறது எனப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு கம்பெனியின் ஃபண்டமென்டல் என்பது பெரும்பாலும் நம்பர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. விற்பனை, லாபம், விற்பனை குறித்த ஃபோர்காஸ்ட் என எல்லா விஷயங்களும் நம்பர்களில் தெளிவாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல் என்பது நம்பர்களால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு சில செய்திகள், ஒரு சிலரின் மனநிலைகள் கூட கரன்சியின் மதிப்பைப் பெரிதும் பாதிக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம். உதாரணமாக, டாலரின் மதிப்பை வழிநடத்திச் செல்லும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சீனாவின் சென்ட்ரல் வங்கிகளின் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் டாலர் போகும் திசையைப் பற்றிய சென்டிமென்ட்டை மாற்றக்கூடியது;

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் தலைநகரங்களில் இருந்து வரும் பயத்தை உண்டு பண்ணி டிரேடர்களை எமோஷனல் ஆக்கும் செய்திகள்;

அமெரிக்காவில் உள்ள ரீடெய்ல் ஸ்டோர்களின் மாதாந்திர சேல்ஸ் பற்றிய அறிக்கை டாலரின் இடைக்கால போக்கைப் பாதிக்கக் கூடியது;

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை;

அமெரிக்காவில் வீடுகளின் விற்பனை எண்ணிக்கை.

என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்ற ஒவ்வொரு விதமான டேட்டாக்களும் டாலரின் மீதான சென்டிமென்ட்டை மாற்றுகிறது. இந்த மாதிரியான சென்டிமென்ட் மாறுதல்கள்தான் விலை ரியாக்ஷன்களையும், டாலரை வாங்க ரெடியாக இருப்பவர்கள் மற்றும் விற்க ரெடியாக இருப்பவர்களின் மனநிலையையும் மாற்றிவிடுகிறது.

சென்ற மூன்று அத்தியாயங்களில் நாம் தியரிடிக்கலாக கரன்சியின் விலை எவ்வாறு மாறுபடக்கூடும் எனப் பார்த்தோம். இப்போது மார்க்கெட்டில் கரன்சியின் விலையை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.


வட்டிவிகிதம்

ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம்தான் கரன்சியின் போக்கை நிர்ணயிக்கும் தலையாய விஷயமாகும். ரிசர்வ் வங்கிகள் நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஓட்டத்தை கட்டுக்குள் வைக்க வட்டிவிகிதத்தை ஒரு த்ராட்டில் போல உபயோகிக்கின்றன. எனவே, இந்த த்ராட்டிலில் வரும் மாற்றங்கள் கரன்சியின் மதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.

வட்டிவிகிதத்தில் நாடுகளுக்கிடையேயான வித்தியாசம்!

ஒரு நாட்டில் நிலவும் வட்டிவிகிதம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை இழுக்கும் காந்தசக்தியாக இருக்கிறது. உதாரணமாக, இந்திய ரிசர்வங்கி திடீரென வட்டிவிகிதத்தை 15 சதவிகிதமாக்குகிறது என வைத்துக்கொள்வோம்... உடனடியாக எந்தெந்த நாடுகளில் எல்லாம் வட்டிவிகிதம் 15 சதவிகிதத்துக்குக் கீழேயுள்ளதோ, அங்கிருந்து பணம் இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்துவிடும். அதன்மூலம் அதிக வட்டியில் முதலீடு செய்து லாபம் பார்க்க முயற்சிப்பார்கள்.

இப்படி வட்டி குறைந்த நாடுகளில் இருந்து வட்டி அதிகமான நாடுகளுக்கு பணம் செல்வதைத்தான் 'கேரி டிரேட்' என குறிப்பிடுவார்கள். வட்டிவிகிதம் குறைவாக உள்ள நாட்டிலிருந்து பணம் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும்போது அதிகமாக வாங்கப்படும் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுகிறது. அதிகமாக விற்கப்படும் அந்த நாட்டின் கரன்சி மதிப்பிழக்கிறது.

இப்படி நடக்கும்போது எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் வருகிறதோ, அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகப்படுத்தினால் உடனடியாக பணம் திரும்பிச்செல்ல முயற்சிக்கும். அப்படித் திரும்பிச் செல்லும்போது இந்திய ரூபாய் அதிகமாக விற்கப்பட்டு மதிப்பிழக்கும். இந்திய ரூபாயை விற்று வாங்கப்படும் மற்ற கரன்சிகளின் மதிப்பு கூடும்.

இன்ஃப்ளேஷன்

இன்ஃப்ளேஷனை வட்டிவிகிதத்தின் உடன்பிறப்பு என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் அனைத்து நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் தங்களுடைய இன்ஃப்ளேஷன் டார்கெட்டைச் சொல்ல ஆரம்பித்துவிட்டன. இன்ஃப்ளேஷன் அதிகமாகிவிடும் என்ற பயம் ஒரு நாட்டைப் பிடித்து ஆட்டும்போது, கரன்சி மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் அந்த நாட்டில் வட்டி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது எனப் புரிந்துகொண்டு வியாபாரத்தில் குதிக்கின்றனர். இன்ஃப்ளேஷன் ஃபாரெக்ஸ் டிரேடர்களையும் ரிசர்வ் வங்கிகளையும் பயமுறுத்தும் ஒரு பூதம். இந்தப் பூதம் அடிக்கடி ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் கூட இன்ஃப்ளேஷனை துல்லியமாகக் கணக்கிடுவது மற்றும் ஃபோர்காஸ்ட் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதையெல்லாம் படித்துவிட்டு ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய முதலில் பெரிய பொருளாதார நிபுணராக வேண்டியிருக்கும் என நினைத்து விடாதீர்கள். எல்லா நாட்டின் ரிசர்வ் வங்கிகளும் இன்ஃப்ளேஷன் குறித்த பல இண்டிகேட்டர்களை அவற்றின் வெப்சைட்டுகளில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவற்றை தொடர்ந்து டிராக் செய்து வந்தாலே போதுமானது.

அடுத்த இதழில்... குருடாயிலின் விலை, மெட்டல்களின் விலை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு, கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் முதலியவை கரன்சியின் மதிப்பை 


எப்படிப் பாதிக்கும் எனப் பார்ப்போம்...






எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

No comments:

Post a Comment