POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 1

அடிக்கடி நமது காதுகளைக் கடந்துபோகிற ஒரு வார்த்தைதான் அந்நியச் செலாவணி. இதற்கு மேல் நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இனி அப்படி இருக்கமுடியாது. அதுவும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களாக இருந்துகொண்டு கரன்சி, ஃபாரின் கரன்சி, ஃபாரெக்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்நியச் செலாவணி குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி! 

'லோக்கல் செலாவணிக்கே வழியில்லை... பிறகு எங்க சார் அந்நியச் செலாவணியை மோசடி பண்றது...' என ஒரு சினிமாவில் காமெடி டயலாக் வரும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் லோக்கல் செலாவணிக்கு வழிசெய்யவேண்டும் என்றாலே, கொஞ்சமாவது அந்நியச் செலாவணி பற்றித் தெரிந்திருக்கவேண்டும். போதாக்குறைக்கு 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் (ஃப்யூச்சர்ஸ்) டிரேடிங்' இந்தியாவில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட, இப்போது ஜம்மென்று வியாபாரம் நடந்து வருகிறது!யார் யார் இந்த வியாபாரத்தைச் செய்வார்கள்? யாருக்கு இந்த வியாபாரம் அவசியம் என்றால் ஒரே விடை அனைவருக்கும் என்பதுதான்! நீங்கள் வண்டியில் நிரப்பும் பெட்ரோலின் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் எப்போதும் 45 டாலருக்கு விற்கிறது என வைத்துக்கொண்டால், ஒரு டாலரின் மதிப்பு 50 ரூபாயாக இருக்கும்போது பெட்ரோலின் விலை அதிகமாகவும், 35 ரூபாயாக இருக்கும்போது விலை குறைவாகவும் இருக்கும் என்பதைச் சுலபமாகப் புரிந்துகொள்வீர்கள். அதுமாதிரி நீங்கள் வாங்கும் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் என எண்ணற்ற தினசரி பயன்பாட்டு விஷயங்களின் விலை டாலரின் மதிப்பைச் சார்ந்தே இருக்கிறது. இந்த விஷயங்களில் தனிநபராகிய நீங்கள் இறக்குமதியாளராக அந்நியச் செலாவணியின் மதிப்பு மாற்றத்தின் பாதிப்பை உணருகிறீர்கள். ஒரு ஏற்றுமதியாளர் எப்படி இந்த விலை மாற்றங்களால் பாதிக்கப்படுவார் எனப் பார்ப்போம். ஒரு பனியன் ஏற்றுமதியாளர் ஒரு டீ-ஷர்ட்டை 40 ரூபாய் அடக்கவிலையில் தயாரித்து 50 ரூபாய்க்கு விற்று 10 ரூபாய் லாபம் பெற நினைக்கிறார். ஒரு ஃபாரின் கம்பெனி அவரிடம் விலை பேசி ஒரு வருடத்துக்கான சப்ளை செய்யும் கான்ட்ராக்டைப் போடுகிறது. அந்த கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடும்போது டாலரின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1,000 டீ-ஷர்ட்களை சப்ளை செய்யவேண்டும், சரக்குக் கையில் கிடைத்ததும் பணம் என்பது கண்டிஷன்! சப்ளை ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் டாலரின் மதிப்பு 35 ரூபாய் என ஆகிவிட்டால் என்னவாகும்? உற்பத்தி விலையான 40 ரூபாய்க்கும் குறைவாக 35 ரூபாய்க்கு சரக்கை விற்றதால், ஒரு டீ-ஷர்ட்டுக்கு 5 ரூபாய் நஷ்டம்! இந்த நஷ்டத்தை அவர் எப்படிச் சரிசெய்யலாம்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது! இதுபோன்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக வந்திருப்பதுதான் 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்.' இனி வரும் இதழ்களில் அது குறித்து ஏ டூ இசட் பார்க்கப் போகிறோம்.

No comments:

Post a Comment