POLICY SERVICE

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 6

கடந்த இதழில் கரன்சியின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பதைப் பார்த்தோம். இனி ஒரு நாட்டின் வட்டி விகிதம் அந்நாட்டு கரன்சியின் மதிப்பை எப்படிப் பாதிக்கும் என்று பார்க்கலாம்...

சரவணனுக்கு அவனுடைய பணம் எப்போதும் குட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதைத் தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு எப்படியாவது லாபம் பார்த்துவிடுவான். அமெரிக்காவில் கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைக்கவும் அங்கே போனவன் ஆரம்பத்தில் கொஞ்சம் தவித்துதான் போனான். அதன்பிறகு அங்கேயும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தைக் குட்டிபோட வைக்க ஒரு வழி இருப்பதைக் கண்டுகொண்டான். அந்த வழி கரன்சி ஆர்பிட்ரேஜ் செய்வது. வழிகாட்டியது அங்கே அவனுடன் வேலைபார்க்கும் ஒருவர்தான்.

அவர் வேலை இருந்தாலும் இல்லா விட்டாலும் தன்னுடைய மானிட்டரில் பிஸினஸ் வெப்சைட்டுகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பார். அதில் டாலர், பவுண்ட் ஆகியவற்றின் ஸ்பாட் மற்றும் ஃபார்வர்டு விலையும் பல்வேறு நாடுகளின் வட்டி விகிதங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அவரிடம்தான் ஸ்பாட் என்றால் என்ன, ஃபார்வர்டு என்றால் என்ன என்று கற்றுக்கொண்டான். ''ஸ்பாட் என்றால் இன்றைக்கு ஒரு பவுண்ட் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு டாலர் கொடுக்கவேண்டும் என்பது. ஃபார்வர்டு என்பது ஒரு வருடம் கழித்து ஒரு பவுண்ட் வேண்டும் என்றால் அதற்காகக் கொடுக்க வேண்டிய டாலர் எவ்வளவோ அதற்கான ஒப்பந் தத்தினை இன்றே செய்துகொள்வது'' என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

அப்படித்தான் ஒரு நாள் பவுண்ட்-ன் ஸ்பாட் விலை 1.50 டாலராகவும், ஒரு வருட ஃபார்வர்டு விலை 1.48 டாலராகவும் இருந்ததையும் கவனித்துவிட்டு மண்டை குழம்பிப் போனான். ''என்ன இது... இன்னைக்கு ஒரு பவுண்ட் வேண்டுமென்றால் 1.50 டாலர் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு வருஷம் கழித்து வேண்டுமென்றால் 1.48 டாலர் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது'' என்று நண்பரது தலையைப் போட்டு உருட்டினான். அவரோ கூலாக அமெரிக்காவில் பேங்க் வட்டி 5% என்பதையும் அதுவே லண்டனில் வட்டி 8 சதவிகிதமாக இருப்பதையும் காட்டினார். சரவணனும் புரிந்துகொண்டான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கரன்சி ஆர்பிட்ரேஜைக் கற்றுக் கொண்டவன், அடுத்தகட்டமாக தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தான்.

அவனது திட்டம் இதுதான்... தனது கணக்கில் வங்கியில் இருக்கும் ஒரு லட்சம் டாலருக்கு வட்டி 5 சதவிகிதம்தான் கிடைக் கும். அதாவது ஒரு வருடத்தில் 5,000 டாலர் தான் கிடைக்கும். அதற்குப் பதிலாக அந்த ஒரு லட்சம் டாலரை இன்றைய ஸ்பாட் விலையில் (ஒரு பவுண்டுக்கு 1.50 டாலர் என்ற நிலையில்) பவுண்டாக மாற்றிவிடுவது. அப்படி மாற்றினால் 66,666.67 பவுண்ட் கிடைக்கும். அதை லண்டன் பேங்க்கில் டெபாசிட் செய்துவிடுவது. அங்கே 8 சதவிகித வட்டி கிடைக்கும் என்பதால், ஒரு வருடம் கழித்து 72,000 பவுண்ட் ஆகிவிடும். அந்தத் தொகையை ஃபார்வர்டு கான்ட்ராக்ட் மூலமாக டாலருக்கு மாற்றிவிடுவது. தற்போதைய நிலையில் 1.48 டாலர் என்ற ரேட்டுக்கு மாற்றினால் 1,06,560 டாலர் ஆகிவிடும். அதாவது அமெரிக்க வங்கியில் போட்டு வைத்திருந்தால் 1,05,000 டாலர்தான் கிடைக்கும். இந்த வழியில் 1,560 டாலர் அதிகமாகக் கிடைக்கும். இதுதான் சரவணனின் கணக்கு.

அதற்கு பின் அவ்வப்போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைத் தவறாமல் பயன்படுத்தி லாபம் பார்த்துவிடுவான். சில சமயங்களில் அவன் பணத்தைப் போடுவதற்குள் ஃபார்வர்டு ரேட் மாறிவிட, ஏமாற்றத் துடன் திரும்ப வேண்டியதாகி விடும். ஆனாலும் எப்படியாவது வருடத்துக்கு பத் தாயிரம் இருபதாயிரம் டாலராவது லாபம் பார்த்துவிடுவான்.

இதைப் படித்ததும் நாமே இப்படிச் செய்து லாபம் பார்க்கலாமே என்று தோன்றுகிறதா? ஆனால், அதுஅவ்வளவு சுலபம் இல்லை. கரன்சி மார்க்கெட்டில் நடக்கும் இந்த ஜாலத்தை 'இன்ட்ரஸ்ட் ரேட் பேரிட்டி' எனச் சொல்வார்கள். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மார்க்கெட்டில் இதுபோன்ற வாய்ப்புகள் சில நிமிடங்கள் இருந்தாலே அது பெரிய விஷயம்!

சரி அது இருக்கட்டும், சரவணனைப் போன்ற ஏராளமானவர்கள் இப்படிச் செய்யும்போது அதனால் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் என்ன நடக்கும் எனப் பார்ப் போம்... நிறைய பேர் டாலரில் கடன் வாங்கி, பவுண்ட் ஆக மாற்ற முயற்சி செய்வார்கள். எனவே லோனுக்கான டிமாண்ட் அதிகமாவதால் டாலரின் (அமெரிக்காவில்) வட்டி விகிதம் ஏறும்.

அப்படி கடன் வாங்குபவர்கள் ஸ்பாட் மார்க் கெட்டில் டாலர்களை விற்று பவுண்டுகள் வாங்கி அதை பேங்க்கில் டெபாசிட் செய்வார்கள். பவுண்டை அனைவரும் துரத்தி துரத்தி வாங்குவதால் பவுண்டின் ஸ்பாட் விலை அதிகரிக்கும். அவ்வாறு வாங்கிய பவுண்டை அத்தனை பேரும் டெபாசிட் போட முயற்சிப்பார்கள். எனவே பவுண்டின் டெபாசிட் சப்ளை அதிகமாகி, அதன் (பிரிட்டனில்) வட்டி விகிதம் இறங்கிவிடும்.

ஒரு வருடம் கழித்து டெபாசிட் முதிர்வுத் தொகையை டாலராக மாற்ற ஃபார்வர்டு கான்ட் ராக்ட் வாங்குவார்கள். அதாவது ஒரு வருடம் கழித்து பவுண்டை விற்பதற்கான ஒப்பந்தம்போட அனைவரும் க்யூவில் நிற்பார்கள். அப்படி விற்கப் படுவதால் ஃபார்வர்டு மார்க்கெட்டில் பவுண்டின் மதிப்பு குறையும்.

இந்த ஹைஸ்பீட் நிகழ்வுகள் விலை வித்தியாசத்தை உடனடியாக நேர் செய்து, ஒரு பாயின்ட்டுக்குப்பின் இதுபோன்ற ஃபண்ட்ஸ் மூவ்மென்ட் செய்து யாரும் லாபம் சம்பாதிக்க முடியாமல் போகும். ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம் மாற்றப்படும்போது இது போன்ற வாய்ப்புகள் வந்து உடனடியாக கரன்சிகள் விற்று வாங்கப்பட்டு விலைகள் சீரடைந்துவிடும். எனவே, ஒரு நாட்டின் வட்டி விகிதம் மாறும்போது மாறுதலுக்கு ஏற்றாற் போல் கரன்சியின் மதிப்பு ஏறவோ, இறங்கவோ செய்யும். இப்படியான மாற்றங்கள் நேரடியாக நடந்தாலும் இந்தியா போன்ற சில முழு கன்வர்ட் டபிலிட்டி இல்லாத நாடுகளில் அந்நியர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து டெபாசிட் செய்து பின்னர் எடுத்துச் செல்லமுடியாது. இதுபோன்ற கரன்சி கட்டுப்பாடுகள் இருப்பதால் இதுபோன்ற நாடுகளில் முழுஅளவில் இந்த பேரிட்டியை எஃபெக்டிவாக கணக்கிடமுடியாது.

ஒரு பொருள் ஒரு நாட்டிலும் மற்றொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு, கரன்சியின் மதிப்பை எஸ்டிமேட் செய்வது எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்...

No comments:

Post a Comment